அனோஜன் விவகாரத்தில் பொது வெளிக் கருத்துகள் ஆபத்தானவை ; சுமந்திரன் முக்கிய கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இன, மத பேதமின்றி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் வகையில் பொது வெளியில் கருத்துகள் பகிரப்படுவது கவலையளிப்பதாக தமிழரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சிகளில் இஸ்லாமிய தலைவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் தாங்களாகவே முன்வந்து அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கும், முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் சில தரப்பினர் செயற்படுவதாகத் தாம் காண்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் நோக்கத்துடன் பொது வெளியில் கருத்துகள் வெளியிடப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும், இது அனோஜனின் நலனுக்கு எதிரானதாக அமையக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை இராஜதந்திர ரீதியில் கையாள்வதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டிய நிலையில், அனோஜனை மன்னிக்குமாறு சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுப்பதைத் தவிர, ஏனைய கருத்துகளை பொது வெளியில் வெளியிடுவது உசிதமானதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கருத்துகள் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். “ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சிகள் வெற்றியடையும் வகையில் எமது நாவைக் காப்போம்; அனோஜனை மன்னிக்குமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் வேண்டுவோம்.
இறை பக்தி உடையவர்கள் அதற்காக இறைவனிடம் மன்றாடுவோம்” எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.