யாழ்ப்பாணம் மண்டைதீவு படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
யாழ்ப்பாணம் மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றையதினம் (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம்
இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் மற்றும் அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் குறித்த வழக்கு சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில் வழக்கின் சான்றுகளை காவல்துறையினர் நீதி மன்றில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கு கடந்த 17.09.2025 அன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, ஊர்காவற்துறை காவல்துறையினரால் குறித்த புதைகுழியின் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் வழக்கு ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.