ரயில் நிலைய சிற்றுண்டிச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பு ; வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
ரயில்கள் மற்றும் ரயில் நிலைய சிற்றுண்டிச்சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியல் இன்றி வியாபாரம் செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தி, நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனைத்து மாவட்ட உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மீனகயா' இரவு நேர ரயிலில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, குடிநீர் போத்தல்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக, சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இன்றைய தினமும் (09) மருதானை ரயில் நிலையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்று அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு அநீதி இழைக்கும் வகையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாத வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான அநீதிகளுக்கு முகம் கொடுக்கும் நுகர்வோர், அது குறித்து உடனடியாகத் தமக்கு அறியத்தருமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.