திடீரென ஏற்பட்ட விபத்து; மயிரிழையில் தப்பிய மாணவர்கள்!
அதி வேகமாகப் பயணித்த லொறியொன்று, பாடசாலைக் கட்டடமொன்றின் மீது விழுந்த நிலையில் அங்கிருந்த மாணவர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பொகவந்தலாவை- பலாங்கொட பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை – பெட்ரசோ தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நோக்கி அதிக வேகத்துடன் பயணித்த குறித்த லொறி, வீதியின் கீழே 150 அடி பள்ளத்தில் இருந்த கெம்பியன் தமிழ் வித்தியாலய பாடசாலைக் கட்டடத்தின் மீது புரண்டு விழுந்துள்ளது.
லொறி இவ்வாறு புரண்ட போது, அக்கட்டடத்துக்குள் மாணவர்கள் சிலர் இருந்துள்ள நிலையில், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ள நிலையில், பாடசாலைக் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளும் காயமடைந்து பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியும் உதவியாளும் மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
