தாமரை கோபுரத்திலிருந்து குதித்து உயிரிழந்த மாணவி; பாடசாலைக்கு சிக்கல்!
கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பில் மாணவி பயின்ற பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றவுடன் குறிப்பிட்ட பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கத்தை பெறுமாறு அதிகாரிகளிற்கு உத்தரவிட்டேன் என கல்வியமைச்சின் செயலாளர் ஜேஎம் திலக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்க அதிகாரம் இல்லை
நாட்டில் இயங்குகின்ற சர்வதேச பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சிற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ள அவர், எனினும் அந்த பாடசாலையிடம் விளக்க கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகள் தொடர்பில் கல்வியமைச்சு நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பது துரதிஸ்டவசமான விடயம் என கல்வியமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பாடசாலைகளை கண்காணிப்பதற்காக நாடாளுமன்றம் சில முயற்சிகளை மேற்கொண்டபோதும் ஆனால் பொறிமுறை எதனையும் உருவாக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட பாடசாலையின் அதிகாரிகள் ஒத்துழைத்தால், தனது அதிகாரிகள் தகவலகளை பெற்று எனக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பாடசாலைகள் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன,அவர்களிற்கு சட்ட கடப்பாடு இல்லாததால் அவர்கள் விபரங்களை சமர்ப்பிக்க மறுக்கின்றனர் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்கும் பதிவு செய்யும் அதிகாரத்தை அமைச்சிற்கு வழங்கும் விதத்தில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.