கோட்டாகோகம கூடாரங்கள் தொடர்பில் பொலிசாருக்கு வியப்பை ஏற்படுத்திய சட்டமா அதிபரின் அறிவிப்பு
கொழும்பு - காலிமுகத்திடல் கோட்டாகோகம போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் இன்று மாலை 5 மணிக்கு முன்னர் வெளியேறுமாறு கோட்டை பொலிஸ் நிலையம் நேற்று முன் தினம் அறிவித்திருந்தது.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள அரசாங்க அல்லது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் பயிர்ச்செய்கைகளை உடனடியாக அகற்றுமாறும் போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் போராட்டக்கள பகுதிக்கு நேற்றைய தினமும் சென்றிருந்த பொலிஸார் குறித்த அறிவிப்பை மீண்டும் வாசித்துக் காட்டியுள்ளனர்.
இதேவேளை மீண்டும் இன்றைய தினமும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இதற்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.