பயிற்சி உரிமம் இல்லாத சாரதிப் பயிற்றுவிப்பாளர்களுக்கு சட்ட நடவடிக்கை
வாகனச் சாரதிப் பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளர்கள் கட்டாயமாக செல்லுபடியாகும் சாரதிப் பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என இலங்கை காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி உரிமம் இன்றி சாரதிப் பயிற்சிகளை வழங்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதி காவல்துறை மா அதிபருமான டபிள்யூ. பி. ஜே. சேனதீர, பல சாரதிப் பயிற்சி நிலையங்கள் முறையான அனுமதிகளைப் பெற்றிருந்தாலும், நடைமுறையில் போதிய தகுதிச் சான்றிதழ்கள் இல்லாத நபர்களே பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

“சாரதிப் பயிற்சிகளை வழங்கும் ஒவ்வொருவரும் கட்டாயமாக சாரதிப் பயிற்சி உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
இல்லையெனில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
முறையற்ற பயிற்சிகளைப் பெற்று சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் இளைஞர்களே அதிகளவில் வீதி விபத்துகளில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்றாததுடன், வீதி அடையாளங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மதிக்கத் தவறுவதும் விபத்துகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், சாரதிப் பயிற்சி உரிமம் வழங்கும் முறைமையை மேம்படுத்துவது தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சான்றளிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே மாணவர்களுக்குப் பயிற்சி வழங்குவதை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் சேனதீர தெரிவித்தார்.