மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் பலத்த பாதுகாப்பு!
மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் இன்றையதினம் (28-10-2024) விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்டு பின்னர் பலத்த பாதுக்காப்புக்கு மத்தியில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டு வைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் தொடர்பான சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறித்த நீதின்ற கட்டிடத் தொகுதியை 25 ம் திகதிக்கும் 28 ம் திகதிக்கும் உட்பட்ட நாட்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக கடந்த 24-10-2024 ஆம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த பதிவு தபால் ஒன்றையடுத்து பொலிஸார் உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்த 24-10-2024 ஆம் திகதி இரவு தொடக்கம் நீதிமன்ற கட்டிட தொகுதி பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை காலை 5 மணி தொடக்கம் விசேட அதிரடிப்படையினர் 8 மணி வரை மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் நடாத்திய பின்னர் நீதிமன்றத்துக்குள் செல்வோரை பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று (28-10-2024) விசேட அதிரடிப்படையினர், மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற உத்தியோகத்தர்களின் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் உள் நுழைய தடை விதித்ததுடன் அனைவரையும் பலத்த சோதனையின் பின்னர் உள் நுழைய அனுமதித்தனர்.
கட்டிட தொகுதியை சுற்றி பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுன் புலனாய்வு பிரிவினரும் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை வெடிகுண்டு வெடிக்கப் போவதாக வந்த கடிதம் தொடர்பாக பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் தனித் தனியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.