தமிழர் பகுதியில் அதிகாரிகளை மிரள வைத்த இடியாப்ப வியாபாரி
கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாத் தோட்டத்தை அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டனர்.

சோதனை நடவடிக்கை
அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக காவல் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்துக் பொலிஸ் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், புட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளைப் பிடுங்கிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.