கல்முனையில் கட்டாக்காலி மாடுகளால் மக்கள் உயிருக்கு அபாயம்
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரின் பிரதான வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தைப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நகரின் பிரதான வீதிகளில் கட்டுப்பாடின்றி உலாவும் கால்நடைகளால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளது.

இதுவரை தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை
நகரின் வீதிப் பாதுகாப்புக்கும் பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள இப்பிரச்சினை தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பல தடவைகள் கல்முனை மாநகர சபை நிர்வாகத்திடம் எழுத்துமூலமாகவும் நேரடியாகவும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பிரதேசமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும், பாரிய விபத்துகளோ உயிரிழப்புகளோ ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கப் போகின்றனரா எனக் கவலை வெளியிட்டுள்ள பொதுமக்கள், இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.