முஸ்லிம்களின் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்!
நீரினால் கொரோனா பரவாது என்பது விஞ்ஞானபூர்வமாக நீரூபணமாகியுள்ளதால் இனியாவது கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்வதை நிறுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 வரவு – செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தனது கன்னி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது தொடர்பில் நிதி அமைச்சருக்கு எமது பாராட்டை தெரிவிக்கிறோம். பொருள் விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வு காண எந்த அரசாங்கத்தினாலும் முடியவில்லை.
வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பில் விமர்சனம் வந்தது. விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து செயற்பட்டதால் தாக்கம் ஏற்பட்டதாக நிதி அமைச்சர் நேர்மையாக ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
எதிரணி ஆர்ப்பாட்டத்தை தடுக்க நீதிமன்றங்கள் எந்த உத்தரவும் வழங்காத நிலையில் வீதிகள் தோறும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பசளை பிரச்சினையால் தொற்று பரவலை காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கவாதிகளை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.
அதேவேளை கொவிட் -19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை தகனம் செய்யும் முயற்சி ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டது. நீரினால் கொரோனா பரவும் என்பது விஞ்ஞானபூர்வமானதல்ல என்பது உறுதியாகியுள்ளது.
எனினும் அதனை அடிப்படையாகக் கொண்டே இருநாட்கள் வைத்திருந்து பிரேதங்கள் ஓட்டமாவடிக்கு எடுத்துச் செல்லப்படுகிற நிலையில் இனியாவது அதனை நிறுத்துங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சிறுபான்மையினரை தூரமாக்கும் செயற்பாடுகளை இனியாவது நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்த ஹக்கீம், ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி தொடர்பில் பிரதமரிடம் வினவியபோது அவர் பதில் வழங்கவில்லை என்றும், பிரதமரோ முக்கிய அமைச்சர்களோ இவ்வாறான விடயங்களை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.