தமிழர் பகுதியில் வேலியே பயிரை மேய்ந்த கதை; முக்கியஸ்தரின் வீட்டில் சிக்கிய களவுபோன கோழிகள்!
முல்லைத்தீவு -மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராமத்தில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் வளர்ப்பு கோழிகள் 15 களவு போயிருந்தது.
இந்த நிலையில் களவுபோன கோழிகளில் 2 கோழிகள் இன்றைய தினம் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில தினங்களிற்கு முன்னர் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டு வளர்ப்பு கோழிகளில் 15 கோழிகள் திருடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருட்டு கொடுத்த குடும்பத்தினரின் நிலை அறிந்து, கிராமத்தவர்களால் கோழி பாதுகாக்கப்பட்டு வரும் வீடு தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்துபுரம் கமக்கார அமைப்பின் பொருளாளர் வீட்டில் கோழி இருப்பதை அவதானித்த குடும்பத்தினர், அங்கு சென்று கோழியை அடையாளம் கண்டு இரண்டு கோழிகளை மீட்டுள்ளனர்.
அத்துடன் கோழி இரண்டுடனும் சென்று இந்துபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், பொலிசார் சம்பவ இடத்தில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு களவாடப்பட்ட எஞ்சிய கோழிகளை மீட்டுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
74 வயதான மூதாட்டி ஒருவர் கோழி வளர்ப்பில் தமது குடும்ப வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் அவரின் வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டியவர் வீட்டிலேலே, வேலியே பயிரை மேய்ந்த கதையாக, களவாட்டப்பட்ட கோழிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளது..