எம்.பி களின் கல்வித் தகுதியால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கல்வித் தகுதி குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வெளியிட்ட கருத்து, நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், "ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்தாம் தரத்தைக் கூடத் தாண்டவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

கல்வியைக் கிண்டல் செய்யும் அரசாங்கம்
இந்த கருத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அமைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சபாநாயகரின் கருத்துக்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச , சக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றித் தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுவது நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு எதிரானது என குறிப்பிட்டார்.
சபாநாயகரின் இத்தகைய பேச்சு நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், எதிர்க்கட்சியின் கௌரவத்தையும் சீர்குலைப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒருபுறம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கல்வியைக் கிண்டல் செய்யும் அரசாங்கம், மறுபுறம் 6-ஆம் தர பாடத்திட்டத்தில் ஆபாசமான விடயங்களைப் புகுத்த முயற்சி செய்கிறது என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.