போதைப்பொருளுடன் பிடிபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி
ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட் ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) களுத்துறை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணை
ஏற்கனவே 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இத்தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
குறித்த சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை எனப் பதிவு செய்யப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் அடையாளம் கண்டதுடன், அவ்விலக்கத்திற்குரிய அதிகாரியே தனக்குப் பணத்திற்காக ஹெரோயின் வழங்குவதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட நபரின் ஊடாக சந்தேகநபரான சார்ஜன்ட்டிற்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துமாறு பணித்த விசாரணை அதிகாரிகள், வழங்கப்பட்ட ஹெரோயின் தொகைக்கான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அந்த அழைப்பிற்கமையப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த சந்தர்ப்பத்திலேயே, களுத்துறை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சார்ஜன்ட் தனது கடமை நேரங்களில்கூட இவ்வாறு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்படும் ஹெரோயின் போதைப்பொருள் தொகைகளையே அவர் இவ்வாறு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
களுத்துறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரபன மற்றும் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர், நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.