மாத்தறை சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை
மாத்தறை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கடந்த 30ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய புதிய நகரப் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஜே.ஏ. அசங்க இந்துனில் என்ற நபர், மேல் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு செய்த குற்றச்சாட்டின் கீழ் மேல் நீதிமன்றத்தால் அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நபர், அகுணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் புதிய கைதிகள் வைக்கப்படும் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், அவரது மோசமான நடத்தை காரணமாக, வைத்திய பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியாக தடுத்து வைக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, தரையில் விழுந்து கிடந்ததைக் கண்ட சிறைச்சாலை அதிகாரிகள், உடனடியாக அவரை சிறைச்சாலை வைத்தியரிடம் அழைத்துச் சென்றனர்.
வைத்தியரின் பரிந்துரையின்படி, அகுணுகொலபெலஸ்ஸ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது இந்த நபர் உயிரிழந்தார். சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, இந்த மரணத்திற்கு ஏதோ ஒரு தாக்குதல் காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, நிறுவன மட்டத்தில் முதலாம் தர சிறைக் காவலர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீரவில சிறைச்சாலையின் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் மேலதிக விசாரணைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அகுணுகொலபெலஸ்ஸ பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அகுணுகொலபெலஸ்ஸ பதில் நீதவான், சம்பவ இட பரிசோதனை ஒன்றையும் மேற்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் கூறுகையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்த கைதியின் மோசமான நடத்தை காரணமாக, மற்ற கைதிகளால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.