இந்த மாத இறுதிக்குள் இலங்கை போக்குவரத்தில் நவீன மாற்றம்
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான பயணச்சீட்டு கட்டணங்களை அட்டை மூலம் செலுத்தும் முறையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலிண சமரகோன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்ததாவது,

107 பேருந்து டிப்போக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பேருந்துகளைப் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 173 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பழுதுபார்க்கும் பணிகளை 2026 மே மாதத்திற்கு முன்னர் முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் நாட்டில் மெட்ரோ பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படும்.
அதற்கு முன் மெட்ரோ பேருந்து சேவைக்கான ஊழியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து பயணச்சீட்டுகளுக்கான வங்கி அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறையை இந்த மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, பேருந்து பழுதுபார்ப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் குறிப்பிட்டார். உதிரிப் பாகங்களைக் கொள்வனவு செய்ய டிப்போக்களுக்கு போதிய வசதி இல்லை. சில டிப்போக்கள் உதிரிப் பாகங்கள் விற்பனை நிலையங்களுக்குக் கடன் பட்டுள்ளன.
கடந்த காலத்தில் உதிரிப் பாகங்கள் வழங்குபவர்கள் பெரும்பாலும் மிகவும் தரமற்ற உதிரிப் பாகங்களை வழங்கியுள்ளனர். நேர்மையாகவும் முறையாகவும் உதிரிப் பாகங்களை வழங்குபவர்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.
எனவே, இந்த மோசடி மற்றும் ஊழல்களை ஒழித்து, இலங்கை போக்குவரத்து சபையை மீட்டெடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.