இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாககுழு உறுப்பினர்களை நீக்குவது தொடர்பில் விவாதம்
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானம் ஒன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான கொறடாவும் ,அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (2023.11.08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் நாளை (2023.11.09) விவாதம் நடத்தப்பட்டு பிற்பகல் தேவையேற்படின் வாக்கெடுப்பு நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டபோது உணர்வற்ற எதிர்க்கட்சியினர் கிரிக்கட் விவகாரத்தில் அக்கறை காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தொடர்பான பிரச்சினையில் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற விவாதம்
பாராளுமன்றத்தில் இன்று (2023.11.08) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உரையின் பின்னர்எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாக சபையை வீட்டுக்கு அனுப்ப அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து பாடுபடுவோம். பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு மத்தியில் ஒளிந்து கொள்ளாமல் பணிகளை செய்வோம்.
வெட்கமற்ற சட்ட அமுலாக்கத்திற்கு, ஒளிந்து கொள்ளாமல் வேலையைச் செய்வோம். இது தொடர்பாக பிரதமர் மற்றும் ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஊழல் நிறைந்த கிரிக்கெட் நிர்வாகம்
இந்த ஊழல் நிரைந்த கிரிக்கட் நிர்வாகத்தை வீட்டுக்கு அனுப்புவோம். அதற்காக வித்தியாசம் பார்க்காமல் ஒன்றுபடுவோம் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் கிரிக்கெட்டை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார். கடந்த வருடம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் ஏற்பட்டன.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது ஒன்று சேராதவர்கள் அப்போது செய்தது போல் இப்பிரச்சினையிலும் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றனர்.
“ஹூ” என்று சொல்லி தமது இனத்தினை காட்டிக் கொண்டால் எனக்கு ஒன்றும் இல்லை. நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது உணர்வற்ற எதிர்க்கட்சிகள் கிரிக்கெட் விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.விளையாட்டு அமைச்சரின் கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம்.
ஆனால், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ள பணிகளையும் நாம் செய்ய வேண்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரேரணை ஒன்றைக் கொண்டுவர வேண்டுமாயின் அதனைக் கொண்டு வாருங்கள். நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. உதவி செய்வோம் என தெரிவித்தார்.