சீனாவுக்கு பறக்கவுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
சீனா தனது எல்லைகளை மீண்டும் திறக்கின்றமையினால் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
2023 ஏப்ரல் மாத முதல் வாரத்தில் சீனாவுக்கான தனது வணிக நடவடிக்கைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் புதுப்பிக்க உள்ளது.
கொவிட் தொற்று நோய் பரவல் காலப்பகுதிக்கு முன் இலங்கையின் உள்வரும் சுற்றுலாவின் முன்னணி மூலச் சந்தையாக சீனா அமைந்திருந்தது.
பயணிகள் போக்குவரத்து
2023 ஏப்ரல் 3 ஆம் திகதி சீனாவின் ஷாங்காய் நகருக்கான பயணிகள் போக்குவரத்து விமானங்களை ஸ்ரீலங்கன் விமான சேவை ஆரம்பித்து வைக்கின்றது.
அதன்படி திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷாங்காய் நகருக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்று, செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஷாங்காய் நகரிலிருந்து அவை கொழும்புக்குத் திரும்பும் என கூறப்படுகின்றது.
கொழும்பில் இருந்து பீஜிங் நகருக்கான விமானங்களும் 2023 ஏப்ரல் 3 இல் தொடங்குவதுடன் ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பீஜிங் நகருக்குப் புறப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்புக்கு திரும்பிவரும் விமானங்கள் அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் புறப்பட்டுச் செல்லும். அதேவேளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது கொழும்பு மற்றும் குவாங்சூ நகரங்களுக்கிடையே ஒரு வாராந்த விமானப் போக்குவரத்தை நடாத்தி வருகின்றது.
இரண்டாவது விமானம் 2023 மார்ச் 4 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும். மேலும், சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு 2023 ஏப்ரல் 4 ஆம் திகதியன்று குவாங்சூ நகருக்கான ஸ்ரீலங்கனின் விமான சேவைகள், ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கொழும்பிலிருந்து குவாங்சூ நகருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்ற வகையில் வாரத்திற்கு மூன்று சேவைகள் இடம்பெறும்.
மேலும் குவாங்சூ நகரிலிருந்து கொழும்புக்கு திரும்பிவரும் விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீண்டும் புறப்பட்டுச் செல்லும்.