உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி!
19ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி எதிர்வரும் (19.08.2023) தொடக்கம் (27.08.2023) ஆம் திகதி வரை ஹங்கேரியில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் 207 நாடுகளைச் சேர்ந்த 2,087 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 6 ஆண் வீரர்களும் ஒரு வீராங்கனையுமாக மொத்தமாக எழுவர் இப்புாட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் இக்குழு இன்றையதினம் (15.08.2023) ஹங்கேரி, தலைநகர் புடபாஸ்டை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மெய்வல்லுனர் அணித் தலைவராக சர்வதேச பதக்கம் வென்றிருக்கும் காலிங்க குமாரகே நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் இந்தப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றபோதும் பல்வேறு காரணங்களுக்காக போட்டியில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியிலும் அபேகோன் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அந்தப் போட்டியில் பங்கேற்பதையும் தவிர்த்தார்.
எனினும் சீனாவின் ஹங்சுவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியை இலக்கு வைத்து அவர் தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதேப்போன்று இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீராங்கனையான கயந்திகா அபோரத்ன 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் புடபாஸ்ட் செல்ல தயாரான போதும், இறுதிநேரத்தில் போட்டியில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொண்டார்.
செப்டெம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியை இலக்கு வைத்து பயிற்சிகளை மேற்கொள்ள கயந்திகா மற்றும் அவரது பயிற்சியாளர் சஜித் ஜயலால் தீர்மானித்துள்ளனர்.
உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அருண தர்ஷன (ஆடவருக்கான 400 மீ.), காலிங்க குமாரகே, பபசர நிக்கு, தினுக்க தேஷான், ராஜித ராஜகருணா, பசிந்து கொடிகார, அருண தர்ஷன (ஆண்களுக்கான 400 மீ. அஞ்சலோட்டம்) மற்றும் டில்ஹானி லேகம்கே (பெண்களுக்கான ஈட்டி எறிதல்) ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
உலக மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.
1997 இல் கிரேக்கத்தில் நடந்த போட்டியில் சுசந்திகா ஜயசிங்க 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கமும் 2003இல் ஒசாகாவில் நடந்த அதே போட்டி நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளமைக் குறிப்பிடத்தக் விடயமாகும்.