அலரிமாளிகை தொலைக்காட்சியை தொட்டவர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
அலரிமாளிகையில் அத்துமீறி நுழைந்து இரண்டு தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் புகைப்படக்கருவி என்பவற்றினை எடுத்துச்சென்ற இருவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சட்டவிரோதமான முறையில் அலரிமாளிகைக்குள் பிரவேசித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சந்தேக நபரை ஐந்து இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இருவருக்கு விளக்கமறியல்
சம்பவம் தொடர்பில் ஹர்ஷன செனவிரத்ன என்ற நபர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அன்வர்தீன் மற்றும் அபேசிங்க ஆராச்சிகே அனுர ஆகிய இருவரும் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட எரங்க குணசேகர, ரங்கன லக்மால் உள்ளிட்ட 17 சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இது தொடர்பில் விசாரணை நடத்தி எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.