90 ஆயிரத்தைத் தாண்டிய டெங்கு நோயாளர் எண்ணிக்கை
இலங்கையில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 10ஆம் திகதி நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக 90,306 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாகது.
இதன்படி, ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 4,959 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில், கம்பஹா மாவட்டத்தில் 19,204 நோயாளர்கள் பதிவாகி அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும். கொழும்பு மாவட்டத்தில் 17,965 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 6,971 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
நடப்பாண்டில் இதுவரை டெங்கு காரணமாக 65 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, டெங்கு மரண விகிதம் 0.07 சதவீதமாக உள்ளது.
எனவே, வீடுகளில் டெங்கு பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதுடன், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.