பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இலங்கை!
இலங்கையில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதன்படி, இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸை துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 576 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதனையடுத்து இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் இலங்கை அணி 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.
இதன்படி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.