இலங்கை மனித உரிமைகள் நிலைமை ; ஐ.நா. பேரவையில் பிரித்தானிய அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் அண்மைய இலங்கை விஜயம் மற்றும் அறிக்கைக்கு பிரித்தானியா தமது நன்றியை தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளை வரவேற்கும் அதேவேளை உறுதியான மற்றும் நிலையான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை செய்வதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை மிக முக்கியமானதோடு, அதனை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் வைக்கப்பட்ட மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களை அச்சுறுத்துதல் மற்றும் சிறுபான்மை சமூகங்களை குறிவைத்தல் ஆகியவை குறித்த உயர் ஸ்தானிகரின் தொடர்ச்சியான கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்களை ஒழிக்க பொதுமக்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த தொடர்ந்து அந்த சட்டத்தை பயன்படுத்துவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
இழப்பீடுகள் மற்றும் காணாமல் போனவர்களை மையமாகக் கொண்ட உள்நாட்டு நிறுவனங்களின் பணிகளை மீண்டும் ஊக்குவிக்கவும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
எந்தவொரு நல்லிணக்கமும் பொறுப்புக்கூறல் செயல்முறையும் உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவும் இருப்பது, பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவைக் கொண்டிருப்பது, கடந்தகால பரிந்துரைகளை உருவாக்குவது மற்றும் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமாகும்.
அதேநேரம் மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்த உங்கள் அலுவலகத்தின் முக்கியமான பணியை முன்னெடுத்துச் செல்லவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் ஸ்தானிகரிடம் பிரித்தானியா கோரியுள்ளது.
மேலும் இந்தப் பிரச்சினை இலங்கையில் முன்னுரிமைப் பிரச்சினையாகக் கவனிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளில் அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.