இலங்கையில் கடும் வெப்பம் ; ஆரோக்கியம் பேண எச்சரிக்கை விடுத்த சுகாதார அதிகாரிகள்
இலங்கையின் நிலப்பரப்புக்கு மேல் சூரியன் இன்று (ஆகஸ்ட் 28) முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை நேராக உச்சியில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கையில் பல பகுதிகளில் கடும் வெப்பம் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி,
இன்று நண்பகல் 12.11 மணியளவில் நாகதீபம் (நயினாதீவு), பூநகரி, மணல்காடு மற்றும் ஆழியவளை ஆகிய நான்கு நகரங்களுக்கு நேராக சூரியன் உச்சத்தில் இருக்கும்.
பூமியின் தெற்கு நோக்கி நகரும் தோற்றப்பாடான அசைவு காரணமாக, சூரியன் இந்த நாட்களில் இலங்கையின் நிலநிரைக்கோடுகளுக்கு நேராக உச்சத்தில் இருக்கும்.
இதன் விளைவாக, பொதுமக்கள் கடுமையான வெப்ப அலைகளுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீர்ச்சத்து குறைவதைத் தவிர்க்க, போதுமான அளவு நீரை அருந்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் வழக்கமாக ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், சூரியன் பூமத்திய ரேகையின் குறுக்கே நகரும்போது இவ்வாறான நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
இந்த நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். வயோதிபர்கள்,பெண்கள்,சிறுபிள்ளைகள்,கர்ப்பிணிகள் அனைவரும் அடிக்கடி தண்ணீர் அருந்துவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
உணவிலும் உடலின் குளிர்மையை கூட்டும் உணவுகளை பெரும்பாலான சைவ உணவுகளை தயிர் முதலானவற்றை உண்ணுங்கள் ஆரோக்கியம் பேணுங்கள் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.