இலங்கையின் முதலாவது பாரிய மின்கல சேமிப்பு திட்டம் ஆரம்பம்
நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள 160 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல (Battery) சேமிப்புத் தொகுதி திட்டத்திற்கான முதற்கட்ட உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 20 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான பாகங்களே முதற்கட்டமாக நாட்டை வந்தடைந்துள்ளன.
இது இலங்கையில் வணிக ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் முதலாவது பெரிய அளவிலான மின்கல ஆற்றல் சேமிப்பு திட்டமாகும்.

சுமார் 40 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டு நிலையான, திறமையான மற்றும் நவீன மின்சார கட்டமைப்பை உருவாக்குவதாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், நாடளாவிய முக்கிய மின்விநியோக துணை நிலையங்களுக்கு அருகில் மின்கல சேமிப்புத் தொகுதிகள் நிறுவப்படவுள்ளன.
இதற்கான இணைப்புப் புள்ளிகளாக காலி மற்றும் மாத்தறை துணை மின்நிலையங்கள் செயல்படவுள்ளன.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், பகல் வேளையில் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மேலதிக மின்சாரத்தை சேமித்து வைத்து, இரவு நேரங்களில் அதிக மின்சார தேவை ஏற்படும் போது பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதுடன், தேசிய மின்விநியோகக் கட்டமைப்பின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த முடியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சூரிய சக்தி அமைப்புகள் சுமார் 9.4 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.
இந்த மின்கல சேமிப்பு அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டால் அந்த பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தத் திட்டத்திற்குத் தேவையான மீதமுள்ள 140 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின்கல சேமிப்புத் தொகுதிக்கான பாகங்கள் அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு வரவழைக்கப்படவுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.