போர் அச்சத்திலும் நாடு திரும்ப மறுக்கும் இலங்கையர்கள்
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள போதிலும், அங்கு பணியாற்றும் 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்களே நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 25ஆம் திகதி வரையிலான உத்தியோகபூர்வ தரவுகளின்படி, சுமார் 200 முதல் 250 இலங்கையர்கள் மட்டுமே இதுவரை தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
இதில் குவைத்திலிருந்து 178 பேரும், பஹ்ரைனிலிருந்து 28 பேரும், இஸ்ரேலிலிருந்து 13 பேரும் அடங்குவர். சவூதி அரேபியா, ஓமான் மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகளில் இருந்து இதுவரை எவ்வித கோரிக்கைகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ச் சூழலில் நாடு திரும்பினால் மீண்டும் வேலை கிடைப்பது கடினம் என்றும், குடும்பப் பராமரிப்பு மற்றும் வாங்கிய கடன்களை மீளச் செலுத்த வருமானம் இன்றிப் போகும் என்றும் பணியாளர்கள் அஞ்சுகின்றனர்.

எவ்வாறாயினும், இஸ்ரேலில் பணியாற்றுவோர், அங்குள்ள 'Iron Dome' போன்ற நவீன ஏவுகணை எதிர்ப்பு கவசங்கள் மற்றும் 'Home Front Command' போன்ற உடனடி எச்சரிக்கை செயலிகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால் அங்கேயே தங்கியிருக்க விரும்புகின்றனர்.
இதனிடையே, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளில் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளதால், வேலை இழப்பதைத் தவிர்க்கப் பலர் அரைவாசி வேதனத்துக்கு பணியாற்றவும் சம்மதித்துள்ளனர்.
நிலைமை மோசமடைந்தால் இலங்கையர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வெளிவிவகார அமைச்சு '24/7' அவசர காலப்பிரிவை (1989) அமைத்துள்ளது.
வான்பரப்புகள் மூடப்பட்டால், தரைவழியாக சவூதி அரேபியா அல்லது துருக்கி எல்லைகளுக்குப் பணியாளர்களை நகர்த்தி, அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படுவோர் அவசர தொலைபேசி: 1989, WhatsApp/Botim: +94777390031, மின்னஞ்சல்: emergency.sl@mfa.gov.lk ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
போர்ப் பகுதிகளில் பணத்தைச் சேமிப்பது பாதுகாப்பற்றது என்பதால், பணியாளர்கள் தமது சேமிப்புகளைத் தாயகத்திற்கு அதிகளவில் அனுப்பி வருகின்றனர்.
இதன் காரணமாக 2026 மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் அதிகபட்சமாக 8.1 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புகள் குறைந்தால், அதற்கு மாற்றாக தென்கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பணியாளர்களை அனுப்பவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.