இலங்கையில் மனைவி, மகள் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட இளம் தந்தை!
மீகொட நாகஹவத்தையில் காரில் பயணித்த 32 வயதுடைய நபர் ஒருவர் வாகனத்தில் பதுங்கியிருந்த இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (14) இரவு பாதிக்கப்பட்ட நபர் தனது சகோதரரின் வசிப்பிடத்திலிருந்து மீகொட நாகஹாவத்தையில் உள்ள தனது சொந்த வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவர் அவரது வாகனத்தை நிறுத்திய போது, மற்றுமொரு நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்தபோது, பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் அவரது ஒரு வயது மகளும் காருக்குள் இருந்தனர்.
உயிரிழந்தவர் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக கடமையாற்றி வந்தவர்.
சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.