மலேசியாவில் இலங்கைப் பெண்ணை கட்டாய உழைப்புக்கு உட்படுத்திய இலங்கையர் கைது
மலேசியாவில் இலங்கைப் பெண் ஒருவரை கட்டாய உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 38 வயதுடைய இலங்கை வர்த்தகர் ஒருவர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் ஜெஞ்சாரோம் (Jenjarom) பகுதியில், மலேசிய குடிவரவுத் திணைக்களத்தின் மனித வர்த்தக எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புப் பிரிவு, பணமோசடி எதிர்ப்புப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைப் பெண் ஒருவர் கட்டாய உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டு சுரண்டப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது, சட்டப்பூர்வமான பயண ஆவணங்கள் மற்றும் செல்லுபடியாகும் வீசா இன்றி மலேசியாவில் தங்கியிருந்த 21 முதல் 51 வயதுக்குட்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலைவாய்ப்பும் வேலை அனுமதிப் பத்திரமும் பெற்றுத் தருவதாக உறுதியளித்து மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பின்னர், சந்தேகநபருக்குச் சொந்தமான உணவகத்தில் எந்தவித சம்பளமும் வழங்காமல் அவரிடம் வேலை வாங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதிய உணவு வழங்கப்படவில்லை என்றும், சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படவில்லை என்றும், உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கும் அவர் உள்ளாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 38 வயதுடைய இலங்கையர், மலேசியப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து நீண்டகால சமூக விஜய வீசாவில் அந்நாட்டில் தங்கியிருந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவர் மீது மலேசியாவின் 2007 ஆம் ஆண்டின் மனித வர்த்தக எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் 1959/63 ஆம் ஆண்டின் குடிவரவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் சுரண்டல், கட்டாய உழைப்பு மற்றும் மனித வர்த்தகச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எதிர்காலத்திலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என மலேசிய குடிவரவுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.