ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதி; அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைது
ஓமானில் மரணித்துள்ள அம்பாந்தோட்டை யுவதி மற்றும் அவரது சகோதரியை ஏமாற்றி சுற்றுலா விசாவில் தொழிலுக்கு அனுப்பியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் அரச உத்தியோகஸ்தர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த யுவதியின் மரணம் கொலையா ? தற்கொலையா ? என ஓமானின் இலங்கை தூதரக காரியாலயம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
நயவஞ்சகமான முறையில் மனித கடத்தல்
இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில்,
ஓமான் நாட்டுக்கு வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்கு அழைத்துச் சென்று, பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி மரணித்த அம்பாந்தோட்டை சுசீ கிராமத்தைச்சேர்ந்த 22 வயதுடைய யுவதி மற்றும் அவரது மூத்த சகோதரியை ஏமாற்றி நயவஞ்சகமான முறையில் மனித கடத்தலில் ஈடுபட்டுவந்த அம்பாந்தோட்டை சமுர்தி அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளின் விசேட நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரி மற்றும் ஒரு சந்தேக நபர் அம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் வைத்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய சந்தேக நபர் அம்பாந்தோட்டை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகயின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதிகள் இருவரையும் டுபாயில் பராமரிப்பு சேவை தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஓமானில் வீட்டுப்பணிப்பெண் தொழிலுக்காக அனுப்புவதற்கு இந்த சந்தேக நபர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுற்றுலா விசாவில் சென்றுள்ளதால், தொழில் இல்லாமல் ஓமானில் பல்வேறு இடங்களில் இந்த யுவதிகள் இருவரும் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மரணம் தற்கொலையா அல்லது கொலையா
பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகிய நிலையில் 22 வயதுடைய துவான் ராசிக் ரமீசா என்ற யுவதி அங்கு மரணித்துள்ளதாக அவரின் மூத்த சகோதரி தனது தாயிக்கு அறிவித்துள்ளார்.
அனுமதி பத்திரம் எதுவும் இல்லாமல் சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக அனுப்பிய இந்த நடவடிக்கை மனித கடத்தல் என்பதுடன் அது சட்டவிரோத நடவடிக்கையாகும்.
இவ்வாறான மனித கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர்களுக்கு எதிராக தராதரம் பார்க்காமல் சட்டத்தை கடுமையாக செயற்படுத்துவதாக பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் இதுதொடர்பில் ஓமானின் இலங்கை தூதரக காரியாலயம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
விசாரணைகளின் முடிவின் பின்னரே சடலத்தை நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரும் அம்பாந்தோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் மூவரையும் ஜனவரி 17ஆம் திகதிவரை விளக்கு மறியலில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுள்ளது.