கனடா ஆசையால் இந்தியாவில் தவிக்கும் இலங்கை தமிழ் இளைஞர்கள்!
இந்தியா-இலங்கை கடல் எல்லையில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச கடத்தல் மோசடியில் ஈடுபட்டதாக இந்திய என்ஐஏ , 6 பேர் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டை சேர்ந்த தினகரன், காசி விஸ்வநாதன், ரசூல், சதாம் உஷேன், அப்துல் முஹீது, சோக்ரடீஸ் ஆகியோர் மீதே இவ்வாறு பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவுக்கு அனுப்புவதாககூறி இலங்கைப் பிரஜைகளை அழைத்துச் சென்ற சந்தேக நபர்கள், இலங்கையர்களை இந்தியாவின் பல்வேறு இடங்களில் அடைத்து வைத்திருந்துள்ளனர்.
தமிழகத்தின் மதுரை மங்களூரில் ஜூன் மாதத்தில் சில இலங்கையர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் ஒரு விடுதியில் தங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், 25 இலங்கையர்கள் கைதாகினர். அடுத்தடுத்த சோதனைகளின் போது மேலும் 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் இவ்வாறு 38 இலங்கையர்கள் நான்கு குழுக்களாக இந்தியாவுக்கு அழத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்த ஆட்கடத்தல் மோசடி குழுவும், இலங்கையிலுள்ள சில மோசடியாளர்களும் இணைந்து இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை பிரஜைகளை கடல் வழியாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள விடாமல் அடைத்து வைத்ததுடன், விரைவில் கப்பல் கனடாவுக்கு செல்லவுள்ளதாக அவர்கள் கூறி வந்துள்ளனர்.
கனடா செல்லும் மோகத்தில் 38 இலங்கையர்களிடமிருந்தும், இலங்கை ரூபாவில் 3.5 முதல் 10 இலட்சம் வரை சுமார் 1.83 கோடி ரூபாய் வரை பணம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை மனித கடத்தல் குற்ச்சாட்டுடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த சிலர் தலைமறைவாகியுள்ளதாக கூற்றப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதாகவும் கூறப்படுகின்றது.