மருத்துவபீடங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கும் திட்டத்தை நிறுத்தப்பட வேண்டும்!
இலங்கை அரச பல்கலைக்கழக மருத்துவபீடங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்கும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல், சமூக செயற்பாட்டாளரான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டப்படிப்பினை தொடர்வதற்காக வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கு அனுமதி அளிக்கும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகின்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டப்படிப்பினை தொடர்வதற்காக வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கு அனுமதி என்ற நிலையை பார்க்கும் போது வியப்பாக இருக்கின்றது.
நாட்டில் உள்ள அரசாங்கங்கள் எந்த அடிப்படையில் இவ்வகையான தீர்மானங்களை எடுக்கின்றன என புரிந்துகொள்ள முடியவில்லை.
பொதுவாக அனைத்து நாடுகளும் தங்களுடைய கல்விக்கொள்கைகளை தத்தமது நாடுகளின் மனிதவள மேம்பாட்டினை உறுதிப்படுத்தும் அடிப்படையிலும் தொழில்துறையினை பற்றாக்குறையற்ற வகையில் பேணும் அடிப்படையிலும் உருவாக்குவார்கள்.
கல்விக்கொள்கை மாற்றப்பட வேண்டும்
ஆனால் இலங்கையில் உள்ள கல்விக்கொள்கைகள் இந்த மேற்கூறிய இரண்டு விடயங்களிலும் தொடர்பற்ற கொள்கைகளாக இருப்பது இப்படியான தீர்மானங்களை அரசாங்கங்கள் எடுப்பதின் அடிப்படையில் புலப்படுகின்றது.
முதலில் எமது நாட்டில் எமது பிரஜைகளை மருத்துவ பட்டதாரிகளாக போதிய அளவில் உருவாக்க வேண்டும். அவர்களை எமது நாட்டில் தொழில்புரிவதற்கேற்ற உரிய திட்டத்தினை செயற்படுத்த வேண்டும்
. நாட்டில் மேலும் பல போதனா வைத்தியசாலைகளை உருவாக்க வேண்டும். மேலும் பல மருத்துவபீடங்களை எமது அரச பல்கலைக்கழகங்களில் உருவாக்க வேண்டும்.
எமது மாணவர்களை மேலும் அதிகமாக மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கப்பட வேண்டும். இதனை தவிர்த்து வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கையில் மருத்துவ கல்வியினை வழங்குவதால் என்ன பலனை நாம் பெற்றுவிட முடியும்?
வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள் மூலம் நாம் பெற எத்தனிப்பது வெறும் வெளிநாட்டு வருமானத்தையா? அவ்வாறு சிந்தித்தால் இதுவொரு முட்டாள் தனமான முடிவாகும்.
தற்போது, எமது மாணவர்களில் பெரும் தொகையானவர்கள் எமது நாட்டு பல்கலைகழகங்களில் இடம் கிடைக்காத காரணத்தால் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவகல்வியினை பயில்கிறார்கள். இதனால் பெருமளவு பணம் எமது நாட்டில் இருந்து வெளியேற்றப்படுகின்றது.
வெளிநாட்டு வருமானம்
வெளிநாட்டு வருமானத்தை கொண்டுவருவதற்கு முதலில் எமது நாட்டு பணம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்க வேண்டும்.
ஆகவே, வெளிநாட்டு மாணவர்களுக்கு எமது நாட்டில் கல்வி வழங்குவதற்கு பதிலாக பல்கலைகழகங்களுக்கு சற்புள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்படாத எமது நாட்டு மாணவர்களுக்கு பணம் செலுத்தி கற்கும் வாய்ப்பினை முதலில் வழங்க வேண்டும்.
இதனால் எமது நாட்டு பணம் வெளிநாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும். அதேவேளை எமது நாட்டு மருத்துவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும்.
இதுவே எமது நாட்டின் சுகாதார துறைக்கு உகந்த அனுகூலமான மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆகவே வெளிநாட்டு மாணவர்களை எமது மருத்துவபீடங்களுக்கு உள்வாங்கும் திட்டம் முதிர்ச்சியற்ற முடிவாகும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.