இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம்; பிமல் ரத்நாயக்க
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். முழுமையாக ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாண் விமானநிலையங்களில் தமிழக முகாமிலிருந்து ந்திரும்பியவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்
இதன்காரணமாக இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் தாய்நாடு செல்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக UNHCR கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மூலும் கூறுகையில்,
இந்த இரண்டு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் ஏன் இடைநிறுத்தியது என்பதை அறியவில்லை.
கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகாமுடன் அமைச்சு மட்டத்தில் பேசுவோம்.
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி அவர்களை இலங்கை பிரஜைகளாக்க உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
சட்டத்தில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நீதியமைச்சுடன் கலந்துரையாடி இவ்வாறான கைதுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.அதிகாரிகள் இழைக்கும் தவறை இனவாதம் என்று குறிப்பிட வேண்டாம்.
தமிழர்கள் என்பதால் இவர்கள் நெருக்கடிக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் பதவி கனவுடன் இருப்பவர்கள் குறிப்பிடலாம் , ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு குறிப்பிடுவது அழகல்ல,
குறைப்பாடுகளை சுட்டிக்காட்டுங்கள் அதனை விடுத்து இனவாத செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காதீர்கள் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.