இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 12 ஆம் திகதியன்று டெட்ரோய்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்ற வரலாறு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற சுமித் குணசேகர,தாம் சிறுவர் ஒருவர் தொடர்புடைய பாலியல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

அத்துடன்,அவர் 2004 ஆம் ஆண்டிலும் ஒழுங்கீனமான நடத்தைக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருந்தாலும், கனடாவில் செய்த குற்றங்களால், அமெரிக்காவில் சட்டப்படி இருக்க இவருக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தெரிய வந்தவுடன், ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் உடனடியாக இவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
"பாலியல் குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவர் தற்போது குடிவரவு அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.