அமெரிக்காவிற்குள் நுழைய மற்றுமொரு இலங்கையின் முத்த இராணுவ அதிகாரிக்கு தடை!
2009 - 2011 காலப்பகுதியில் மலேசியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா (Udaya perera) அமெரிக்காவினால் போர்க்குற்ற சந்தேகநபராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அந்நாட்டுக்குள் நுழைவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி உதய பெரேரா அவரது குடும்பத்துடன் அமெரிக்கா செல்வதற்காக பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற போது, அவருக்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, போர்க்கால நடவடிக்கைகள் செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றியிருந்த அவர் , 2019 இல் வழங்கப்பட்ட 5 ஆண்டு பல்நுழைவு வீசாவினைப் பெற்றிருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2020 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா (Shavendra Silav) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை, கடற்படை அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க ஆகியோருக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.