பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை; அரசை துளைத்தெடுக்கும் மனோகணேசன்!
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கண்டனக்களை தெரிவித்து வருகின்றது. ஆனால் இலங்கையில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு யாரும் அனுதாபமோ அல்லது இரங்கலோ தெரிவிக்கவில்லை.
தமிழ் அரசியல் கைதியான கிளிநொச்சி சுதாகரன் போன்றவர்கள் யுத்தம் முடிவுற்று ஒரு தசாப்தம் கடந்த நிலையிலும் இன்னும் சிறைகளில் வாடிவருகின்றனர். அதேநேரம் சுதாகரனின் மனைவி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தபோது அவருக்கு சிலமணிநேரங்களே மனைவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து அவர் திரும்புகையில் தாயை இழந்த சுதாகரனின் குழந்தை தந்தை சென்ற வாகனத்தில் தானும் ஏறிசெல்ல முயன்ற சம்பவம் பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைந்திருந்தது. இன்னும் அவர்களின் தந்தை விடுவிக்கப்படவில்லை.
அதேவேளை யாழ் மிருசுவில் கிராமத்தில், பாலகர்கள் உட்பட 8 பேரை படுகொலை செய்த நபர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டு தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றார். ஏதுமறியாத அப்பாவிகள் தமிழர்கள் என பிறந்த காரணத்தால் இன்னும் சிறையிருக்கின்றனர்.
அதேவேளை பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையருக்காக பல பாகிஸ்தான் மக்கள் இரங்கலை தெரிவித்ததுடன் இலங்கை மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளனர். அது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மனோகணேசன் பதிவிடுகையில்,
இப்படி Sorry என்று கூட சொல்லாத, சொல்ல தெரியாதவர்கள் ஆளும்-வாழும் நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். சுட்டும் விரலால் பாகிஸ்தானை குற்றம் சாட்டும் போது மற்றெல்லா விரல்களும் இங்குள்ள இவர்களை காட்டுகின்றன.
பிரியந்த குமாரவை கொலை செய்த பாகிஸ்தான் அடிப்படைவாதிகளுக்கு உச்ச தண்டனை வேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. அதை நாம் கோருகிறோம்.
ஆனால், நம் நாட்டில், மிருசுவில் கிராமத்தில், பாலகர்கள் உட்பட 8 பேரை கொலை செய்ததால், முதன் முறையாக இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட, சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சிப்பாயை, ஜனாதிபதி கோதாபாய பதவிக்கு வந்த உடனேயே முதல் வேலையாக விடுவித்தார்.
இப்படி பல. இது ஒரேயொரு உதாரணம் மட்டுமே. இவர்கள்தான் இன்று பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுகிறார்கள் என மனோகணேசன் பதிவிட்டுள்ளார்.