தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி
19 வயதுக்குட்பட்ட ஒருநாள் இளையோர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 6 சுற்றில், இன்று (29) நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில், தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 262 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் போட்டியின் 46 ஆவது ஓவரில் கடந்து இலங்கை அணி இந்த வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியுடன் இம்முறை உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான நம்பிக்கையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள இலங்கைக்கு முடிந்துள்ளது.

தொடரின் மற்றுமொரு தீர்மானமிக்க போட்டி நாளை (30) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
அப்போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால், இலங்கையால் போட்டியின்றி அரையிறுதிச் சுற்றுக்கு நுழைய முடியும். மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றியீட்டினால், ஓட்ட சராசரி வீதத்தின் அடிப்படையில் இரு அணிகளில் ஒன்றிற்கு அந்த வாய்ப்பு கிட்டும்.
ஆரம்ப சுற்றில் அவுஸ்திரேலியாவிடம் 58 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தமையே இலங்கையின் உலக கிண்ண பயணத்தில் இந்த தடையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.