யாழ். போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை?
யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவது மற்றும் அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையை தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்த பின்னர், அதனை தேசிய மருத்துவமனை நிலைக்குத் தரம் உயர்த்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனை குறித்த நிறுவன ரீதியான ஆய்வு கடந்த ஜனவரி 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டம் கலாநிதி நிஹால் அபேசிங்க தலைமையில் நடைபெற்றது.
மருத்துவமனையில் தற்போது வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் சேவைகளை மேலும் விரிவுபடுத்த மேலதிகப் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பணியாளர்களின் தேவையை மறுமதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை கலாநிதி அபேசிங்க இதன்போது வலியுறுத்தினார்.
மருத்துவமனை நிர்வாகம் மற்றும் ஒட்டுமொத்த செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, உள்நாட்டு கணக்காய்வாளர் ஒருவரை நியமிக்க வசதி செய்து தருமாறு மருத்துவமனை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.