இந்தியாவில் தீவிரம் ;நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை சுகாதாரத் துறை விசேட அவதானம்!
உலகம் முழுவதும் சில நாடுகளில் பரவியுள்ள நிபா வைரஸ் தொடர்பில் இலங்கையின் சுகாதாரத் துறையினர் விசேட அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியாவில் பரவியுள்ளதாகக் கூறப்படும் நிபா வைரஸ் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவில் தீவிரம்
எதிர்வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரவுள்ள நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் பதிவான உடனேயே சுகாதார அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியது.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். இது கடந்த கொவிட் (Covid-19) தொற்றைப் போன்றதல்ல, இது மிகவும் ஆபத்தானது.
கடந்த 4 நாட்களில் மட்டும் 40,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ஜனவரியில் 277,000 பேர் வருகை தந்து சாதனை படைத்துள்ளனர். எனவே, இந்த நேரத்தில் சுகாதார அமைச்சு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.
மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வைரஸ்
நிபா வைரஸ் என்பது பன்றிகள் மற்றும் வௌவால்கள் போன்ற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். வைரஸ் தொற்றிய உணவு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கோ இது பரவலாம்.

உலக சுகாதார ஸ்தாபனம் இதனைத் தொற்றுநோயாக மாறக்கூடிய ஆபத்துள்ள முன்னுரிமை நோய்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.
அதேவேளை சென்னையில் நூற்றுகணக்கான காகங்கள் உயிரிழந்த நிலையில், நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிக்கன் மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்து உண்ணுமாறு தமிழ்நாடு சுகாதார துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இந்திய ஊகங்கள் தெரிவித்துள்ளன.