சாப்பிட்ட எலும்பு துண்டுகளை முதியவருக்கு வழங்கி வீடியோ; கொந்தளித்த இணையவாசிகள்!
சாப்பிட்ட எலும்பு துண்டுகளை ஆதரவற்ற முதியவருக்கு வழங்கி வீடியோ வெளியிட்ட மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக் இற்கு இந்திய ரூ.9.2 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூயின்' மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், மூன்று சிறுவர்கள் கோழி இறைச்சியை உண்டுவிட்டு, மீதமிருந்த எலும்புகளை ஒரு ஆதரவற்ற முதியவருக்கு வழங்குகின்றனர்.

இன்ஸ்டா பிரபலம் மீது வழக்குப் பதிவு
”இன்று நாம் ஒரு நற்செயல் செய்யப் போகிறோம்” என்ற பின்னணி குரலுடன் அந்த வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த இன்ஸ்டா பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், ”இது ஒரு தர்ம காரியம் அல்ல,பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் ஒரு மனிதனின் வறுமையை சுரண்டும் திட்டமிட்டச் செயல்” என்று வாதிட்டார்.
அதோடு பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவரும் இந்தச் செயலால் தான் மிகுந்த மனவேதனையும், கோபமும் அடைந்ததாகத் தெரிவித்தார். தனது செயலுக்கு மன்னிப்புக் கோரிய டேங் சீ லுக், குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு கோரினார்.
இருப்பினும், இதுபோன்ற செயல்கள் இனி தொடராத வண்ணம் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதுடன், அவருக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அந்த பிரபலம் அபராதத் தொகையைச் செலுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கியுள்ள அந்த இளைஞர், ”இந்தச் சம்பவத்துக்காக நான் மனதார வருந்துகிறேன். இனி என்னை முழுமையாக மாற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு முன் தோன்றுவேன்” என்று தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.