புட்டின் துவக்கிய போர்! இலங்கை பொருளாதாரம் திவாலாகும் நிலை.. IMF ரிப்போர்ட்
இலங்கை நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நுகர்வோர் சந்தையில் அனைத்து உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயு இல்லாமல் அதிகப்படியான பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது இலங்கை.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் ஒரு முக்கியமான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
இலங்கை பொருளாதாரத்தைச் சீர்குலைத்துள்ள அந்நாட்டின் அதிகப்படியான கடன் மூலம் தற்போது solvency (கடனளிப்பு) பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடனளிப்புப் பிரச்சனை என்றால் கையில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பிற்கு அதிகமாகக் கடன் பெற வேண்டி நிலை உருவாவது.
சர்வதேச நாணய நிதியம் அமைப்பின் ஊழியர்கள் செய்த ஆய்வில், இலங்கையின் தற்போதைய நிதி நிலையை ஆய்வு செய்தும் போது கடன் அளவை பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வர அதிகப்படியான அட்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் இலங்கை solvency பிரச்சனையை எதிர்கொள்வதில் இருந்து தப்ப முடியாது.
மேலும் இந்த அறிக்கையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு, உக்ரைன் உடனான போர் காரணமாக வெளிநாட்டுப் பயணிகள் வருகை எண்ணிக்கை சரிவு ஆகியவற்றின் மூலம் இலங்கை நாட்டின் அன்னிய செலாவணி அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.
இதன் வாயிலாகத் தற்போது இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டு உள்ளார். இதற்காகப் பேச்சுவார்த்தை தற்போது நடந்து வரும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் நிதியுதவி அறிவிக்கப்படும் என ஐஎம்எப் கூறப்படுகிறது. இதற்காக அந்நாட்டின் நிதியமைச்சரும், கோட்டாபய ராஜபக்சே-வின் சகோதரரும் பசில் ராஜபக்சே வாசிங்டன் சென்றுள்ளார்.
தற்போது இலங்கையில் உருவாகியிருக்கும் பொருளாதாரம் மற்றும் விலைவாசி பிரச்சனையைத் தீர்க்க இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே வட்டி விகிதத்தை உயர்த்தவும், அவசியம் இல்லாத பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.