கார்த்திகை முக்கியமான மாதம்; டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெற உள்லதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று (12) நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
கார்த்திகை மாதமென்பது முக்கியமான மாதம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது மக்களுக்கான வரவுசெலவுத் திட்டமாகும். நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
அனைத்து துறைகள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு பகுதிக்கும் பாகுபாடு காட்டப்படவில்லை. வடக்கு,கிழக்கு மக்களும் வரவேற்றுள்ளனர்.
இது மகிழ்ச்சியளிக்கின்றது. கார்த்திகை மாதமென்பது முக்கியமான மாதம். மாவீரர்களை நினைவு கூருகின்ற மாதம். அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்கில் உள்ளவர்கள் தமது பிள்ளைகளை நினைவு கூருகின்ற மாதமாகும்.
அந்த மாதத்தில் இருந்து கொண்டு நாம் கடந்த காலத்தை திரும்பி பார்க்க வேண்டிய தேவை உள்ளது. த மிழ் மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் போராடிய இளைஞர்கள் எதிர்பார்த்தது என்ன? அவர்களின் அபிலாசைகள் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
போதைப்பொருள் மாபியாக்களுடன் தமிழ் அரசியல் வாதிகள்
தமது மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்பட அவர்கள் போராடி இருந்தால், அந்த கனவை நிறைவேற்றுவதற்குரிய செயற்பாட்டை எந்தவொரு தமிழ்க் கட்சியாவது, அரசியல்வாதியானது முன்னெடுக்கின்றனரா? இல்லை. அது கேள்விக்குறியாகவே உள்ளது.
வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை குறைவடைந்து வருகின்றது. வறுமையும் இங்குதான் அதிகரித்து வருகின்றது. கடந்தகால ஆட்சியாளர்கள் இப்பகுதி பற்றி அவதானம் செலுத்தவில்லை.
தமது மடியை நிறைத்துக் கொள்ளும் வகையிலான அரசியலே இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்வியில் யாழ்ப்பாணம் சிறந்து விளங்கியது. எனினும், கடந்த காலங்களில் அது வீழ்ச்சியடைந்து வருகின்றது.
கடந்த 7 மாதங்களாக புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் மாபியாக்கள் வடக்கை அச்சம் கொள்ள வைத்துள்ளன. போதைப்பொருளுக்கு பின்னால் இராணுவம் உள்ளது என குற்றஞ்சாட்டினீர்கள். அதில் உண்மை உள்ளது.
ஆனால் இராணுவமும், பொலிஸும் வேறாக இல்லை. அங்குள்ள மாபியாக்களுடன் இணைந்துள்ளன. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல் வாதிகளும் பிணைந்துள்ளனர். அவ்வாறானவர்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்த இராணுவம், பொலிஸ்மீது குறைகூற முடியாது.
ஒரு சிலரின் செயற்பாடு தொடர்பில் பிழை உள்ளது. மாபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறினார்.