இலங்கை தொழிலதிபர் கொலை: மிரட்டல்கள் விடுத்த மனைவி! திடுக்கிடும் தகவல்
இலங்கை தொழிலதிபரான ஒனேஷ் சுபசிங்கவின் மனைவியான பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண், ஒனேஷ் கொல்லப்படுவதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை
ஒனேஷ் சுபசிங்கவுக்கும் அவரது மனைவிக்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்போது கொலை செய்துவிடுவேன் என்று பலமுறை ஒனேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரின் நண்பர் என கூறப்படும் மற்றைய சந்தேக நபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் தனது மனைவி, மகள் மற்றும் மனைவியின் நண்பருடன் விஜயம் ஒன்றிற்காக, ஒனேஷ் சுபசிங்க கடந்த 19ஆம் திகதி இந்தோனேஷியா சென்றதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சுபசிங்கவின் கொலையின் பின்னர் அவரது மனைவியும் மகளும் பிரேசில் நாட்டு நண்பருடன் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும், சம்பவத்தின் பின்னர் தப்பியோடிய மனைவி மற்றும் அவரது நண்பரைத் தேடுவதற்காகவும் விசேட இரகசிய பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் செல்லவுள்ளது.
சுபசிங்கவின் பிரேசிலைச் சேர்ந்த மனைவியின் தோழி மாஃபியா கும்பல் ஒன்றின் உறுப்பினர் என தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொலை செய்யப்பட்ட ஒனேஷ் சுபசிங்க இலங்கையில் 32 வர்த்தக நிறுவனங்களை வைத்திருக்கும் கோடீஸ்வர வர்த்தகரும் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.