வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் அதிரடி கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் இன்று (08) அதிகாலை விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
குறித்த நபர் இன்று (08) அதிகாலை 04:00 மணியளவில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் (Flydubai) விமான சேவைக்குச் சொந்தமான FZ-569 எண் கொண்ட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டதும், இதுவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்படாததுமான "டாப் கன்" (Top Gun) வகையைச் சேர்ந்த 40,000 சிகரெட்டுகளும் (200 சிகரெட் கார்ட்டன்கள்) இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்தையடுத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவரைக் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.