இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
சுமார் 13,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6,500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க கூறுகிறார்.
அதன்படி, இலங்கையில் உள்ள பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது ஐம்பது சதவீத விரிவுரையாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் சிக்கல்கள்
கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1,500 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக கட்டமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 150 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளதாகவும், பல பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற பீடங்களில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க சுட்டிக்காட்டுகிறார்.
இந்த சூழ்நிலை காரணமாக, பல பட்டப்படிப்புகளின் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு போதுமான வசதிகள் மற்றும் சம்பளம் இல்லாததே இந்த நிலைமைக்குக் காரணம் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள பல சிக்கல்கள் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு தற்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.