வெளிநாடொன்றின் பிடியில் இலங்கை? சீன - இந்தியா மோதும் களமாக மாறும் இலங்கை?
"பசியில் இருக்கும் நாம் சாப்பாட்டிற்காக யாரிடமும் கையேந்துவதில் தவறில்லை? இதில் சீனாவா? இந்தியாவா? அமெரிக்காவா? என்று பார்க்க முடியாது? அதனால் எல்லோரிடமும் உதவிகளை பெறத் தயாராக உள்ளோம்" என்ற கருத்து பட ஒரு தமிழ் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவரின் கருத்து படி இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார கொள்கை எப்படி இருக்கப்போகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளில் சீனாவும் உள்ளது.
சீனாவுக்கான கடனை மீள செலுத்துவது தொடர்பான ஒரு பொறிமுறை ஒன்றை உருவாக்கி சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை மீளச் செலுத்தும் அல்லது இரத்துச் செய்வது என எதாவது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தால் தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி இலங்கைக் கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிலையில் யுவான் வாங் 5 என்ற கப்பல் கடந்த ஜுலை 13ம் தேதி சீனாவின் ஜியாங்ஜின் துறைமுகத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன், அந்த கப்பல் ஓகஸ்ட் மாதம் 11ம் தேதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இவ்வாறான கப்பல் வருகைத் தருகின்றமை, அசாதாரணமானது கிடையாது என கேணல் நலீன் ஹேரத் தெரிவிக்கின்றார்.
யுவான் வாங் என்ற சீன நாட்டின் உளவு கப்பலின் வருகை இந்திய, இலங்கை உறவுகளில் மற்றும் பொருளாதார உதவி திட்டங்களில் பாறிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்து சமுத்திரத்தில் சீனாவி ஆதிக்கம் இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வியாக பார்க்கப்படும் அதேவேளை இலங்கை எதிர்கால இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலான நாடாக மாறியுள்ளதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஒரு புறம் பொருளாதார நெருக்கடி மறுபுறம் கடன் சுமை, அத்தோடு அரசியல் நெருக்கடி, மக்கள் போராட்டம் என நாடே பெரும் குழப்பத்தில் இருக்கும் இந்த நேரத்தில் பிராந்திய வல்லாதிக்க நாடுகளின் அதிகாரப் போட்டிக்குள் ளும் இலங்கை சிக்கியுள்ளது.
எனவே இலங்கை தற்போது இருக்கும் நிலையில் தனது நாட்டு மக்களின் பசிக்கு உணவு கொடுத்து பொருளாத நெருக்கடிக்கு தீர்வு கண்டு தனது நாட்டை காப்பாற்ற முயற்சிக்குமா? அல்லது இந்தியாவின் பாதுகாப்பு பிராந்திய உறவு குறித்து கவனம் செலுத்துமா என்பதே இன்றைய கேள்வி. எனவே சீனாவின் உளவு கப்பல் இலங்கை வருவதை யாராலும் தடுக்க முடியாது அந்த கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்து அதன் பணிகளை முன்னெடுக்கத்தான் போகிறது.
அதனை பின்னர் இலங்கை அரசு பல காரணங்களை கூறி இந்தியாவை இலங்கையால் ஏமாற்ற முடியும் அல்லது சமாளிக்க முடியும். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இந்தியாவையும் இந்திய வெளியுறவுக் கொள்கையையும் ஏமாற்றிய இலங்கைக்கு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் எதிர் எதிராக இருந்த இந்தியா சீனா நாடுகளை ஒற்றுமையாக செயற்பட வைத்த இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு சீனக் கப்பலின் வருகை ஒரு பெரிய விடயம் அல்ல.
எனவே இந்து சமூத்திர கடல் பாதுகாப்பு இலங்கையின் கடல் பிராந்தியம் என்பது தற்போது வரை அது இலங்கையின் கையில் இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் பேச்சுவார்த்தைக்கு போன போது கூறிய ஒரு விடயம் ஞாபகம் வருகிறது. இலங்கையின் 95 வீதமான கடல் பரப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்,
வடகிழக்கில் 80 வீதமான நிலப்பரப்பு அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது எனவே அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு போனது சரியானதே என கூறியிருந்தார்.
உண்மையில் இலங்கையின் கடல் வளத்தை 30 ஆண்டுகளாக கடல் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதுடன் அவர்கள் இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தது கிடையாது.
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து விட்டால் இந்து சமுத்திரத்தின் ராஜாவாக இந்தியா இருக்கும் என்று இந்தியா எதிர் பார்த்த போதும். இலங்கை மீதான தவறான வெளியுறவுக் கொள்கை காரணமாக சீனா இந்துசமூத்திரப் பிராந்தியத்திற்குள் நுழைந்து தனக்கு போட்டியாக இவ்வளவு நெருக்கமாக வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
அதனால் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் ஒட்டுமொத்த இலங்கையின் நிலப்பரப்பு மற்றும் கடல் பிராந்தியங்களின் பாதுகாப்பு, சீனா போன்ற நாடுகளின் கைகளுக்குள் சென்றுவிட்டது.
அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவு ஒட்டுமொத்த இலங்கையையும் சீனா போன்ற அன்னிய நாடுகள் கைப்பற்றுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
யுத்தம் ஆயுத ரீதியாக வெல்லப்பட வேண்டும் என்று கருதிய இலங்கையின் ஆட்சியாளர்கள், பொருளாதாரம் என்ற ஒன்றை பற்றி சிந்திக்கவே இல்லை.
இந்நிலையில் ஆயுதங்களையும், கடனையும் அள்ளிக் கொடுத்து இலங்கை இராணுவத்தை வைத்தே தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த சீனா போன்ற நாடுகள் யுத்தம் வெற்றி பெற்ற பின்னர் கொடுத்த கடனுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம், போட் சிட்டி, என இன்னும் பல இடங்களை பெற்றுக்கொண்டதுடன் அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் அதிக கடன்களை அதிக வட்டிக்கு வழங்கினர்.
மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் தாங்கள் அதிகாரத்தில் இருப்பதற்கும் ஆட்சியை காப்பாற்றுவதற்கும் எண்ணினார்ளே தவிர நாட்டை பற்றி சிந்திக்கவில்லை.
இந்நிலையில் தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இலங்கயை ஒரு அழகிய விலைமாதுக்கு ஒப்பனை செய்யும் வகையில் ஜெ.ஆர். காலத்து வெளியுறவுக் கொள்கை பின்பற்றி சர்வதேச நாடுகளுக்கு வலைவிரிக்க பார்க்கிறார்.
இலங்கையை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைக்கு தற்போதைய பொருளாதார, அரசியல் நெருக்கடி கொண்டு வந்து விட்டிருக்கிறது.
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இலங்கையின் சர்வதேச கொள்கை, கடந்த 40 ஆண்டுகளாக இந்து சமுத்திரத்தின் அழகிய விலைமாது போன்ற தோற்றப்பாட்டை சர்வதேச நாடுகளுக்கு காட்டி அதன் ஊடாக பெருந்தொகை பணத்தை பெற்றுக் கொண்ட ஆட்சியாளர்கள் சுகபோகம் அனுபவித்து விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்று விட்டு தற்போது சீனா வரக்கூடாது, இந்தியா வரக்கூடாது, அமெரிக்கா வரக்கூடாது என யாரால் கூற முடியும்.
எனவே இலங்கைக்கு சீன கப்பல் மாத்திரம் அல்ல இந்திய, அமெரிக்க கப்பல்கள் எல்லாம் இனி தாராளமாக வரும் இந்து சமுத்திரத்தின் ஆதிக்க போட்டியின் நேரடி களமாக இலங்கை மாறும். சீன இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தை பரீட்சித்துப் பார்க்கும் களமாக இலங்கை மாறும்.
இந்திய பாதுகாப்பு படையினர் இலங்கையின் பொருளாதார அரசியல் நெருக்கடிகளையும் வடகிழக்கு தமிழர்களின் இனப்பிரச்சினை மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தங்களை காரணம் காட்டி இலங்கைக்குள் நுழையலாம். இவ்வாறு பல சம்பவங்கள் இலங்கையில் நடப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன.