இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று
திருகோணமலையில், இன்று சனிக்கிழமை (27) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
பதவிகளுக்கான தெரிவுகள்
புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து , ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று இடம்பெறுகின்றன.
இந்நிலையில் புதிய நிர்வாக குழுவின் ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தற்போது திருகோணமலை முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடி வருகின்றனர்.
அதன் பின்னர், பொதுச்சபை உறுப்பினர்களையும் உள்வாங்கி கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன.
அதேவேளை இன்று பதவிகளுக்கான தெரிவுகள் நிறைவடைவதை தொடர்ந்து, நாளை (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.