இணைந்து செயற்பட முன்வருமாறு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்களது கட்சிகளும் எமது கட்சியும் இணைந்து ஒன்றாகப் போட்டியிட்டது போல இந்தத் தேர்தலிலும் சில இடங்களிலாவது ஒன்றாகப் போட்டியிடுவது தொடர்பில் மார்ச் 2 ஆம் திகதி செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடத் தீர்மானித்திருந்தோம்.
எனினும் அந்த முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது தமது கட்சியைத் தவிர்த்து வேறு ஒரு கூட்டணியைக் கடந்த 23ஆம் திகதி உருவாக்கியமை ஏமாற்றம் அளிப்பதாகவும் சி.வி.கே.சிவஞானம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய இந்த நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த முயற்சியை மேலும் தொடர விரும்புவதாகவும் இதற்கான தங்களதுஇணக்கம் இருக்குமானால் தொடர்ந்து பேச முடியும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் தனித்துப் போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பின் இணைந்து வடக்கு - கிழக்கில் உள்ள சகல தமிழ் உள்ளூராட்சி மன்ற நிர்வாகங்களையும் நாம் கைப்பற்றும் முகமாகத் தேர்தலுக்குப் பின் செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்றைத் தேர்தலுக்கு முன்னரே ஏற்பாடு செய்ய வேண்டும்.