மீண்டும் பின்னடைவை சந்தித்த இலங்கை! சரிந்த பொருளாதாரம்
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வருடாந்தம் 8.4 வீதமாக சுருங்கியுள்ளது.
இதனை தொகைமதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, விவசாயம் 8.4 சதவீதமும், தொழில்துறை 10 சதவீதமும், சேவைகள் 2.2 சதவீதமும் சுருங்கியுள்ளன.
மேலும், மின்சார துண்டிப்பு, எரிபொருள் தட்டுப்பாடு, இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் பற்றாக்குறை, உரம் மற்றும் பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேளாண்மையில், பயிர்ச்செய்கை ஓராண்டுக்கு முன் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 32.3 சதவீதம் சரிந்துள்ளது.
இதில் தேயிலை 19.7 சதவீதம், நெல் 15.6 சதவீதம், கடல் மீன்பிடி 15.3 சதவீதம், இறப்பர் 13.7 சதவீதம், கால்நடை உற்பத்தி 13.6 சதவீதம், காய்கறிகள் 13.2 என்ற வீதத்தில் குறைந்துள்ளன.
ஆனால் நன்னீர் மீன்பிடி 11.2 சதவீதமும், தென்னை 10.5 சதவீதமும், வனவியல் மற்றும் மரம் வெட்டுதல் 9.0 சதவீதமும், பலசரக்கு பொருட்கள் 3.2 சதவீதமும் உயர்ந்துள்ளன.
அத்துடன், இந்த காலாண்டில் தொழில்துறையில் உற்பத்தி 5.3 சதவீதம் சுருங்கியது.
இருப்பினும், ஆடைத்துறை, மற்றும் தோல் தொடர்பான பொருட்கள் 28.2 சதவீதம் உயர்ந்துள்ளன.
உணவு, பானங்கள் மற்றும் புகையிலை பொருட்களின் உற்பத்தி 11.0 சதவீதம் குறைந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி 78.0 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் கட்டுமானம் 16.2 சதவீதம் சரிந்துள்ளது. சுரங்கம் மற்றும் கல்லுடைத்தல் என்பன 26.7 சதவீதம் குறைந்துள்ளன.
சேவைகள் துறையில், காப்பீட்டு சேவைகள் 16.8 சதவீதம் சரிந்தன, நிரலாக்க மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகள் 8.4 சதவீதம் சரிந்தன.
குடியிருப்பு மற்றும் சொத்து விற்பனைகள் 6.0 சதவீதம் சரிந்தன. பொருட்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் நடவடிக்கைகள் 0.7 சதவீதம் சரிவடைந்தன.
மின்சாரம் மற்றும் மின் தடை, எரிபொருள் பற்றாக்குறை, அந்நிய செலாவணி விதிமுறைகள், நிச்சயமற்ற செயல்பாட்டு சூழல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை ஆகியவை இரண்டாம் காலாண்டின் வளர்ச்சியை பாதித்துள்ளன.
தங்குமிடம், உணவு மற்றும் பானங்கள் வழங்கும் நடவடிக்கைகள் 35.3 சதவீதமும், அஞ்சல் மற்றும் பொதி விநியோகச் சேவைகள் 11.7 சதவீதமும், தொலைத்தொடர்பு சேவைகள் 8.6 சதவீதமும், கல்விச் சேவைகள் 5.0 சதவீதமும், மொத்த விற்பனை மற்றும் சில்லறை வர்த்தகம் 1.7 சதவீதமும் உயர்ந்துள்ளன.