முடிவுக்கு வரும் இலங்கையின் அரசியல் குழப்பம்!
கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தன் ராஜினாமா கடிதத்தை, 'மின்னஞ்சல்' வாயிலாக, அந்நாட்டின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனேவுக்கு நேற்று முன்தினம் (13-07-2022) அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி வருகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன் தினம் தன் பதவியை ராஜினாமா செய்வதாக உறுதி அளித்து இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக, தெற்காசிய நாடான மலைத்தீவுக்கு தப்பி சென்றார்.
தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளனர். இந்நிலையில், மாலைத்தீவில் இருந்து தனி விமானத்தில் நேற்று புறப்பட்ட கோட்டாபய, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு, அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 7:00 மணிக்கு சென்றடைந்தார்.
கோட்டாபய வருகை குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
'கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். 'அவர் எங்களிடம் தஞ்சம் கேட்கவும் இல்லை, நாங்கள் அளிக்கவும் இல்லை' என்றார்.
இதற்கிடையே, கோட்டாபய இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனேவுக்கு, (Mahinda Yapa Abeywardena) மின்னஞ்சல் வாயிலாக தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இந்தக் கடிதம் சட்டரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக இன்று உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மாலைத்தீவின் சபாநாயகர் முகமது நஷீத் (Mohamed Nasheed) தன் டுவிட்டர் பதிவில்,
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இனி அந்நாட்டு அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கி நகரும் என நம்புகிறேன்.
அவர் இலங்கையில் இருந்து கொண்டே பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa) முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) ஆகியோர் மீது கொழும்பு நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணை முடிவடையும் வரை நாட்டைவிட்டு வெளியேற மாட்டோம் என, மஹிந்தாவும், பசிலும் உச்ச நீதிமன்றத்துக்கு நேற்று உறுதி அளித்தனர்.
இதற்கிடையே, இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் வன்முறையை கைவிடுமாறு ராணுவம் நேற்று வேண்டுகோள் விடுத்தது. மீறினால், விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறு எச்சரித்தது.
மேற்கு மாகாணத்தில் நேற்று காலையில் விலக்கிக் கொள்ளப்பட்ட ஊரடங்கு, மீண்டும் அமலுக்கு வந்தது. ஜானதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் நேற்று ஒப்புக் கொண்டனர்.
தங்கள் கோரிக்கைகள் முழுவதுமாக நிறைவேறும் வரை, பழைய நாடாளுமன்றம் மற்றும் காலி மைதானத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர்.
?? President GR has resigned. I hope Sri Lanka can now move forward. I believe the President would not have resigned if he were still in Sri Lanka, and fearful of losing his life. I commend the thoughtful actions of the Govt of Maldives. My best wishes to the people of Sri Lanka.
— Mohamed Nasheed (@MohamedNasheed) July 14, 2022