இலங்கைக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்று வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் போட்டி நிகழ்வின் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டி புதன்கிழமை (4) இலங்கை நேரப்படி மாலை 4.55 மணிக்கு நடைபெற்றது.
இந்தியாவுக்கு வெள்ளி சீனாவுக்கு வெண்கலம்
போட்டியில் பங்கேற்றிருந்த இலங்கை வீராங்கனையான தருஷி கருணாரட்ண 2 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து தங்கம் பதக்கம் கைப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.
போட்டியின் இரண்டாவது இடத்தை பிடித்த இந்தியாவின் ஹார்மில்ன் பெய்ன்ஸ் ( 2 நிமிடங்கள் 3.75 செக்கன்கள்) வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த சீனாவின் வேங்க் சுன்யு (2 நிமிடங்கள் 3.90 செக்கன்கள்) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அதேசமயம் போட்டியில் பங்கேற்ற மற்றுமொரு இலங்கை வீராங்கனையான கயன்திக்கா அபேரட்ண 2 நிமிடங்கள் 5.87 செக்கன்களில் நிறைவு செய்து 8 ஆவது இடத்தை பிடித்தார்.
தருஷி கருணாரட்ன கைப்பற்றிய தங்கப் பதக்கமானது, ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை கைப்பற்றிய 12 ஆவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.